அக்கறைக்கு நன்றி சனூசி, ஆனால் போட்டியிட மஇகா விரும்பவில்லை!


கோலாலம்பூர். ஜூலை 7 - 
இம்முறை ஆறு மாநிலப் பொதுத் தேர்தலில் பங்கேற்க விரும்பாமல் தேசிய முன்னணி பங்காளிக் கட்சியியான மஇகா ஒதுங்கியுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. 

ஆனால், மஇகா தேசிய முன்னணியிலிருந்து விலகி தேசியக் கூட்டணியுடன் ஒத்துழைக்கத் தயார் என்றால் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அக்கட்சிக்கு வழங்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று அதன் தேர்தல் கேந்திரத்தின் இயக்குனர் முகமட் சனூசி முகமட் யூனோஸ் அரைகூவல் விடுத்தார்.
 
ஆயினும், கெடா மாநில மந்திரி புசாருமன சனூசியின் அழைப்பினை மஇகாவின் தலைவர் விக்னேஸ்வரன் நிராகரித்தார்.  

மஇகா சனூசியின் அழைப்பை பரிசீலிக்காது என்று மேளவையின் முன்னாள் தலைவருமான விக்னேஸ்வரன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். 

இம்முறை ஆகஸ்டு 12ஆம் நாளன்று கெடா, பினாங்கு, சிலாங்கூர்,நெகிரி செம்பிலான், கிளந்தான், திரங்காணு ஆகிய ஆறு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது என்று கடந்த புதனன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மஇகாவிற்கு நிச்சயம் போட்டியிட சட்டமன்றத் தொகுதிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்த தேசிய முன்னணி தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் அழைப்பை ஏற்க மறுத்து மஇகா விலகிக்கொண்டுள்ளது.

இம்முறை மாநிலத் தேர்தலில் மஇகா போட்டியிடாது என்று அக்கட்சியின் மத்தியச் செயற்குழு முடிவெடுத்துள்ளதாக விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.

தேசியக் கூட்டணியுடன் ஒத்துழைப்பை தொடங்கும் விதமாக மாநிலத் தெர்தலில் போட்டியிடும் வாய்பை மஇகாவிற்கு வழங்க முன்வந்த சனூசியின் பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறேன்.

ஆனால், அவரின் அழைப்பை ஏற்பதற்கு கட்சிக்கு விருப்பமில்லை காரணம் நாங்கள் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டோம் என விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

என்னதான் இதற்கு முன் பாஸ் மற்றும் பெர்சத்து கட்சியுடன் அரசாங்கம் அமைத்த அனுபவம் மஇகாவிற்கு இருந்தாலும், கூட்டரசுப் பிரதேச அளவில் ஒருமைப்பாடு  அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற மாட்சிமை தங்கிய மாமன்னரின் கட்டளைக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். 

மேலும் தேசிய முன்னணி கூட்டணியை விட்டு வெளியேறும் கேள்விக்கே இங்கு இடமில்லை காரணம் இவ்விவகாரத்தை நாங்கள் எதிர்க்கவில்லை மாறாக மாநிலத் தேர்தலில் மட்டுமே நாங்கள் பங்கேற்கவில்லை என்ற முடிவை எடுத்துள்ளோம் என்று அவர் கூறினார். 

இதற்கு முன் தேமுவின் மற்றொரு பங்காளியான மலேசிய சீன சங்கமும் இதே உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தி தேசிய கூட்டணியின் அழைப்பை நிராகரித்தது. அக்கட்சியின் தலைவர் வீ கா சியோங் மஇகா போன்று நீண்ட விளக்கம் தராமல் மிக ரத்தினச் சுருக்கமாக "நோ" (முடியாது) எனும் ஒரே வார்த்தையில் சனூசியின் அறிக்கைக்கு அவரது முகநூலில் பதிலளித்துள்ளார். 

அதுமட்டுமில்லாமல் நோ என்ற வார்த்தைக்கு விளக்கமும் அளிக்கவில்லை. 

முன்னதாக சனூசி அவர் அறிக்கையில் தேசிய முன்னணியில் மசீசாவுக்கும் மஇகாவிற்கும் சரியான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் அவ்விரு கட்சிகளும் போட்டியிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement