கோலாலம்பூர் ஜூன் 30 -
என்ன நடக்கிறது மஇகாவில்? கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று மஇகா மத்திய செயற்குழுவில் இருந்து ச.சிவராஜ் நீக்கப்பட்டப் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மேலவை உறுப்பினர் தாம் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அதிரடி அறிக்கையை வெளியிட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அக்கட்சியின் சிலாங்கூர் இளைஞர் அணித் தலைவர் புனிதம் இன்று கட்சியிலிருந்து உடனடியாக விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும் தாம் கட்சியில் வகித்துவரும் கோலசிலாங்கூர் பண்டார் பாரு பாத்தாங் பெர்ஜுந்தாய் தொகுதி இளைஞர் பகுதி தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகிக்கொள்வதாகக் கூறியுள்ளார்.
புனிதன் தன்னுடைய இந்த முடிவை மஇகாவின் தலைவர் ச.விக்னேஸ்வரனுக்கு இன்று அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இருப்பினும் தாம் கட்சியில் வகிக்கும் அனைத்து பொறுபுகளிலிருந்தும் விலகியதற்கான காரணத்தை அவர் அக்கடிதத்தில் குறிப்பிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மஇகாவில் மத்தியசெயலவை உறுப்பினர் பதவி உட்பட தேசிய இளைஞர் தொகுதியின் செயலாளர், தேசிய இளைஞர் தகவல் துறைத் தலைவர் என பல பொறுப்புகளை வகித்த நான் இன்று இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.
நாட்டில் நடக்கும் ஒருமைப்பாடு அரசாங்கத்தின் கீழ் தாம் தொடர்ந்து இந்திய மக்களின் குரலாக எதிரொலிக்கப்போவதாகவும் புனிதன் சூளுரைத்துள்ளார்.
கடந்த செவ்வாயன்று மேலவை உறுப்பினராக இருக்கும் சிவராஜ் மஇகாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
கட்சியின் மேல் மட்டத்திலிருந்து தம்மை சேவையாற்ற விடாமல் தடுக்கும் முயற்சியும் சிலர் தமக்கெதிராக கீழறுப்பு வேலையில் ஈடுபட்டுள்ளதாலும் அக்கட்சியை விட்டு விலகுவதாகக் கூறினார்.
இனி வரும் காலங்களில் மேலவை உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக அவர் கூறினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks