ரசாருடின், அயோப் கான் காவல் படையின் சிறந்த கூட்டணி

இனி குற்றவாளிகளுக்கு, குண்டர் கும்பலுக்குத் தொடங்கியது ஏழரை சனி!


கோலாலம்பூர், ஜூன் 23 - 
நாட்டின் புதிய தேசிய காவல் படைத் தலைவராகவும், துணைத் தலைவராகவும் முறையே ரசாருடின் ஹுசேன், அயோப் கான் மைடின் பிட்சே ஆகிய இரு உயர் அதிகாரிகளும் மாட்சிமை தங்கிய பேரரசரின் ஆசியோடு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

காவல் படையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொண்ட துடிப்புமிக்க சிங்கங்களாக வலம் வருகின்ற இந்த இரு உயரிய அதிகாரிகளின் நியமனம் அரச மலேசிய காவல் படை வரலாற்றில் சிறந்த கூட்டணியாக வர்ணிக்கப்படுகின்றனர்.

அரச மலேசிய காவல் படையை இன்னும் பல வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்ல இவ்விரு 'சிங்கங்களின்' தலைமைத்துவம் பொற்காலமாக இனி பெரும் பங்காற்றப்போவதாக கூறப்படுகிறது.


இவ்விருவரும் மிகப் பெரிய பொறுப்பை சுமந்திருப்பதாகக் கூறிய அமைச்சர் சைபுடின் சசூதியோன் இஸ்மயில், அவர்களின் புதிய தலைமைத்துவத்தில்  இனி  வரும் ஆண்டுகளில் 216வது அகவையை அடைந்துள்ள அரச மலேசிய காவல் படை நாட்டின் பாதுகாப்பையும் அமைதியையும் தொடர்ந்து நிலைநிறுத்துவதின் மூலம் அதன் மாண்பைக் காக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

"முன்னாள் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி ஒப்படைத்துள்ள இந்த மிகப்பெரிய பொறுப்பை நிச்சயம் ரசாருடினும் அயோப் கானும் தொடர்ந்து  வழிநடத்தி பல சாதனைகளைப் படைப்பார்கள் என்று பெரிதும் நம்புகிறேன்.

"முதன் முறையாக சிறந்த ஒரு கூட்டணியாக ரசாருடின், அயோப் கானின் கூட்டணியை இன்று நான் காவல் படையில் பார்க்கிறேன். இதுநாள் வரை காவல் படையில்  இவர்களின் அனுபவம், தரமான தலைமைத்துவமும் இதற்கு முக்கியச் சான்றாகும்.


இந்த இரு துருவங்களின் தலைமைத்துவத்தில் இனி வரும் காலங்களில் மலேசிய காவல் படை நாட்டின் மிகப்பெரிய சட்ட அமலாக்கப் பிரிவாக   உருவெடுக்கப்போவது உறுதி என்றார் அவர்.

நேற்று, தலைநகரிலுள்ள காவல் பயிற்சி மையத்தில் நடைபெற்ற புதிய காவல் படைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான அதிகாரப்பூர்வ நியமனச் சடங்கில் கலந்து கொண்ட பின் மேற்கண்டவாறு கூறினார்.

இதற்கு முன் கடந்த ஆண்டு இறுதியில் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசாருடின் கடந்த 16 மார்ச் மாதம் கட்டாயம் பணி ஓய்வு பெற வேண்டியிருந்தது.

இருப்பினும், அவரின் பதவிக்காலம் இன்னும் இராண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை  அரண்மனையில் பேரரசரிடம் இவரது நியமனத்துக்கான ஒப்புதலை சைபுடின் நசுதியோன் பெற்றார்.


இதனிடையே கடந்த ஆண்டில் ஜோகூரிலிருந்து புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டு போதைப்பொருள் குற்றவியல் துறை இயக்குனராக நியமிக்கப்பட்ட அயோப் கான் கடந்த மார்ச் மாதம் குற்றவியல் விசாரணைத் துறையின் இயக்குனராக பதவியேற்றார்.

பிறகு மாமன்னரின் ஒப்புதலுடன் இன்று தேசிய காவல் படை துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புக்கிட் அமானின் சிறப்புப் பிரிவிலுள்ள தீவிரவாதம் துடைத்தொழிப்பு பகுதியில் முக்கிய அதிகாரியாக இருந்த இவர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்றால் மிகையாகாது.

பல குண்டர் கும்பல், குற்றவாளிகள், போதைப் பொருள் கடத்தல் கூட்டத்திற்கு  மிகப் பெரிய தலைவலியாக இருந்து அவ்வனைத்தையும் முறியடித்த பெருமையும்  இவரைச்சாரும்.

இதனிடையே, இதற்கு முன் அயோப் கான் வகித்த குற்றவியல் விசாரணை துறையின் புதிய இயக்குனர் யார் என்பது விரைவில் முடிவெடுக்கப்படும் என்று  சைபுடின் மேலும் கூறினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement