தகவல் பரிமாற்றத்தில் காவல் படை, லஞ்ச துடைத்தொழிப்பு ஆணையம்!
கோலாலம்பூர், ஜூன் 17 -
அரச மலேசிய காவல் படையும் மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையமும் தற்போது தீவிர விசாரணைத் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளன என்று காவல் படையின் தேசியத் தலைவர் அக்ரீல் சானி அப்துல்லா சானி உறுதிப்படுத்தினார்.
இந்நாட்டில் பரவலாக ஆங்காங்கே சட்டத்திற்குப் புறம்பாக இணைய வழி சூதாட்டத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள் பாதுகாத்து செயல்படுகின்றனர் என்ற தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளதால் இந்த முயற்சியில் நாட்டின் அவ்விரு அரசாங்க பாதுகாப்புத் துறையும் கூட்டாக ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, இணையத் தள சூதாட்டத்தில் அரசியல்வாதிகள் ஈடுபாடு இருப்பதாக உறுதிப்படுத்தும் தகவலையும் காவல் படை பெற்றதாக அக்ரீல் சானி கூறினார்.
இதனால், இது குறித்து தொடர் விசாரணையை தொடங்குவதற்காக தற்போது காவல் படையும் லஞ்ச ஒழிப்பு ஆணையமும் விசாரணைத் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் இந்த சூதாட்டம் நாடும் நாட்டு மக்களையும் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் காவல் படை மிக உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும் இது சார்ந்து எடுக்கப்படுகின்ற எந்த ஒரு நடவடிக்கையும் நாட்டிலுள்ள சட்டத்திற்கு உட்பட்டதாகும் என்று அக்ரீல் புக்கிட் அமானில் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையின் வழி தெளிவுப்படுத்தினார்.
கடந்த வியாழனன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதியோன் இஸ்மயில், நாட்டில் நிகழும் சட்டத்திற்குப் புறம்பான இணைய சூதாட்டத்தின் பின்னால் பெரிய அரசியல்வாதிகளின் செல்வாக்கும் ஆதிக்கமும் இருப்பதாக அம்பலப்படுத்தினார்.
இந்த விவகாரத்தால் இணைய சூதாட்டத்தை துடைத்தொழிக்கும் முயற்யில் ஈடுபட்டிருக்கும் காவல் படைக்கு இது மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.
அமைச்சர் கேள்வி நேரத்தின் போது, இந்நாட்டில் நிகழும் இணைய சூதாட்டத்தின் பின்னால் அரசியல்வாதிகள் செயல்படுவது உண்மைதானா என்று கேள்வி எழுப்பிய சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ரமணனின் கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.
ஆகவே 1953 திறந்த வெளி சூதாட்ட சட்டத்தில் சிறிய திருத்தம் கொண்டு வந்து குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் நிறுத்தி கடும் தண்டனை விதிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்றார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks