பெட்டாலிங் ஜெயா, மே 3 -
பிறந்து ஒரு சில மணி நேரமே ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் குப்பை வீசும் இடத்தில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
இந்த மனதை உறைய வைக்கும் சம்பவம் நேற்று அதிகாலை மணி 7 அளவில் அவ்வழியே சென்ற தம்பதிகளால் இங்குள்ள டாமான்சாராவில் அமைந்திருக்கும் கம்போங் சுங்கை காயு அராவில் உள்ள ஜாலான் மஸ்ஜிட் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தின் உதவி ஆணையர் திரு முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் உறுதி படுத்தினார்.
அந்த தம்பதியினர் பிறகு அக்குழந்தையை அருகேயுள்ள டாமான்சார காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காவல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
"அக்குழந்தை மஞ்சள் நிறத் துணியால் இன்னும் தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் பாதுகாப்பாகக் கண்டெடுக்கப்பட்டது.
"அக்குழந்தை சுங்கை பூலோ மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது," என்று ஃபக்ருடின் மேலும் கூறினார்.
குழந்தை அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயங்களுக்கும் ஆளாகாமல் நல்ல நிலையில் இருப்பதாகவும் இடது கன்னத்தில் மட்டும் சிவந்துள்ளதாக அச்சிசுவைப் பரிசோதித்த மருத்துவர் உறுதிப்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 2.5 கிலோ கிராம் எடையையும் 49 சென்டிமீட்டர் உயரம் கொண்ட அக்குழந்தை தற்போது குழந்தைகள் சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகச் சொன்னார்.
"தற்போது, காவல் துறை விசாரணை அறிக்கையைத் தொடங்கி இச்சம்பவத்தை செக்ஷன் 317 குற்றவியல் வன்முறை சட்டத்தின் கீழ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
"இந்த மனிதநேயமற்ற செயலைப் புரிந்தவரை காவல் துறை தற்போது வலை வீசி மும்முரமாகத் தேடி வருகிறது.
"இச்சம்பவம் தொடர்பாக தகவல் வைத்திருக்கும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவுவதற்காக அருகாமையிலுள்ள காவல் நிலையத்திற்கு விரைந்து உடனடியாக ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks