சட்டவிரோதக் குடிநுழைவு சேவை மூலம் மில்லியன் கணக்கில் கொள்ளையடித்த பெண் பிடிபட்டார்!


புத்ராஜெயா, மே 19 -
வெளிநாட்டினர் மற்றும் முதலாளிமார்களுக்கு சட்டவிரோதமான முறையில் குடியேற்ற சேவைகளை வழங்கி அதன் மூலம் மில்லியன் கணக்கில் பணத்தை கொள்ளையடித்ததாக நம்பப்படும் ஒரு பெண் இறுதியில் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

சுமார் 48 வயதுடைய அம்மாது தலைநகரிலுள்ள ஸ்தாப்பாக், தாமான் மெலாத்தி உத்தாமாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் குடிநுழைவு அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டார்.

தலைநகர குடிநுழைவுத் துறையின் இயக்குனர் சியாம்சுல் பத்ரின் மொஹ்ஷின் இத்தகவலை இன்று ஜாலான் டூத்தாவிலுள்ள உள்துறை அமைச்சின் கட்டடத்தில் நடைபெற்ற சிறப்புப் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இந்தத் தகவலை அம்பலப்படுத்தினார்.

கடந்த புதன் மே 17 இல் குடிநுழைவு சிறப்புப் படையினர்  காலை 11 மணியளவில் அப்பெண் வசித்துவந்த வீட்டில் "Ops Serkap" ஒப்ஸ் செர்காப் அதிரடி சோதனையின் மூலம் சந்தேகத்துக்குறிய அப்பெண்ணை கையும் களவுமாகப் பிடித்தனர்.

அப்பெண் தனது “வாடிக்கையாளர்களிடம்” தொழிலாளர் மறுசீரமைப்பு (RTK) திட்டப் பதிவுகளுக்கு ஒவ்வொரு சட்டவிரோத அந்நிய நாட்டவர்களிடமிருந்தும் தலா RM2,500 மற்றும் தற்காலிக வேலை வருகை அனுமதி அட்டை (PLKS) புதுப்பிப்பதற்கு RM8,000 வசூலித்ததாக முதற்கட்ட விசாரணையின் வழி தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

"இப்பெண் சார்ந்த கும்பலின் சட்டவிரோத நடவடிக்கை குறித்து தகவல் பெறப்பட்டதும்  கடந்த ஒரு மாத காலமாக குடிநுழைவின் உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாங்கள் தீவிரமாக  மேற்கொண்டோம்.

"ஒரு முதலாளி அந்தப் பெண்ணின் சந்தேகத்துக்குறிய செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளித்த பிறகு இந்த கைது வேட்டையை மேற்கொண்டு இப்பெண்ணையும்  அவரைச் சார்ந்த  கும்பலையும் முறியடித்தோம்," என்றார்.

"நண்பராகக் அறிமுகமான வங்காளதேச ஆடவர் என்று நம்பப்படும் அந்நபரின் உதவியோடு அப்பெண் தனது திட்டத்தை நடத்தி அவளை நாடும் வாடிக்கையாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தை வசூலித்து வந்துள்ளது  எங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டது.

"அதுமட்டுமல்லாமல், இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டபோது அப்பெண்ணுக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் 42 முதல் 48 வயதுடைய மூன்று வெளிநாட்டவர்களும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று அவர் மேலும் சொன்னார்.

மேலும், முறியடிக்கப்பட்ட அக்கும்பலிடமிருந்து நாங்கள் 314 வங்காளதேச பயணக்   கடப்பிதழ்கள், ஒரு மடிக்கணினி, கைத்தொலைபேசி, 17 CIDB அட்டைகள் மற்றும் RM61,550 ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினோம் என்று அவர் மேலும் கூறினார்.

கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நாளன்று  மதியம் 12.20 மணியளவில் ஸ்தாப்பாக், தாமான் ஸ்ரீ ரம்பையில் உள்ள பெண்ணின் அலுவலகத்திலும் குடிநுழைவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக சியாம்சுல் பத்ரின் உறுதிப்படுத்தினார்.

அச்சோதனையில், இருந்து 53 வங்காளதேச பயணக் கடப்பிதழ்கள், 198 சிஐடிபி அட்டைகள், ஏழு கட்டண பதிவு புத்தகங்கள், எட்டு நிறுவன கோப்புகள் மற்றும் மூன்று நிறுவன உரிமங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 

இவர்கள் அனைவரும் கடப்பிதழ் சட்டம் 1959/63 இன் கீழ் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement