ஜெலுத்தோங்கிலுள்ள 3 சட்டமன்றங்களுக்குக் குறி
கோலாலம்பூர், மே 19 -
ஆறு மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவிருப்பதால் பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்பதற்காக மலேசிய சமவுடைமை கட்சி பினாங்கு மக்களிடத்தில் கருத்து சேகரிப்பை மேற்கொள்ளவிருக்கிறது.
எதிர்வரும் ஜூன் மாதம் இறுதியில் ஆறு மாநில சட்டமன்றங்களும் களைக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படும் இவ்வேளையில், பினாங்கு மாநிலத்தில் போட்டியிடுவது குறித்து அம்மாநில சமவுடைமை கட்சி போட்டியிடலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்காக அம்மாநில மக்களிடத்தில் கருத்து சேகரிப்பை விரைவில் நடத்தவுள்ளது.
இருப்பினும், தேர்தலில் போட்டியிட்டு தொகுதியில் வெல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேராத சமவுடைமை கட்சி நன்கு உணர்ந்திருப்பதாக, அதன் மத்திய செயற்குழு உறுப்பினரான சூ சுன் காய் கூறினார்.
ஆகவே, மக்களிடத்தில் கருத்து சேகரிப்பின் மூலம் சமவுடைமை கட்சி பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் இம்முறை போட்டியிடலாமா என்பதை முடிவு செய்ய இயலும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த மக்கள் கருத்து சேகரிப்பு இணையத்தின் வாயிலாகவும், நேர்முக சந்திப்பின் மூலமும் மேற்கொள்ளப்படும் என்று உறுதிபடுத்தினார்.
இதற்காக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்குச் சென்று கருத்து சேகரிப்பி பாரத்தைப் பூர்த்தி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுவர்.
பிறகு, இணையத்தின் வாயிலாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து சமவுடைமை கட்சி பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவளிக்க விரும்புபவர்கள் https://bit.ly/3NR2eRP எனும் பகுதியில் வழங்கப்பட்டுள்ள பாரத்தைப் பூர்த்தி செய்யலாம்.
இந்த மக்கள் கருத்து சேகரிப்பு நடவடிக்கை இன்று தொடங்கி எதிர்வரும் ஜூன் 28ஆம் திகதிக்குள் அதாவது ஆறு வாரங்களுக்கு மேற்கொள்ளப்படும்.
அந்த விண்ணப்ப பாரங்களில் சமவுடைமை கட்சி பினாங்கு சட்டமன்றத் தேரிதலில் போட்டியிடுவதற்கு ஆதரவு கொடுக்கப்படுமா, போட்டியிடுவதற்கு எவை சரியான தொகுதிகள், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் எவை போன்ற கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
இருப்பினும், கட்சி நிர்ணயித்துள்ள மொத்த வாக்காளர்கள் ஆதரவை பெறும் இலக்கை அடைந்தால் மட்டுமே சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக சமவுடைமை கட்சி அதன் வேட்பாளரை நிறுத்தும்.
அவ்வகையில் ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்றங்களை தற்போது சமவுடைமை கட்சி குறிவைத்து அங்குள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையிலிருந்து சிறுபான்மை ஆதரவை அதாவது 10 விழுக்காடு வாக்காளர்கள் ஆதரவை இலக்காகக் கொண்டு அதன் வேட்பாளர்களை நிறுத்தும்.
முதலாவதாக டத்தோ கெராமாட்டில் 2,800 சிறுப்பான்மை வாக்காளர்கள் ஆதரவு, சுங்கை பீனாங் (3,400 ஆதரவு), பத்து லஞ்சாங் சட்டமன்றத்தில் 3,300 சிறுப்பான்மை வாக்காளர்கள் ஆதரவைக் கொண்டிருந்தால் மட்டுமே வேட்பாளர்களை அந்த மூன்று பகுதிகளிலும் நிற்க வைக்கும்.
இந்த நிர்ணயிக்கப்பட்ட மூன்று சட்டமன்றங்களைத் தவிர்த்து, வாக்காளர்கள் வேறு பகுதிகளையும் கட்சி போட்டியிடுவதற்கு பரிந்துரைக்கலாம்.
"ஒருவேளை, அந்த மூன்று தொகுதிகளில் சமவுடைமை கட்சி திட்டமிட்டது போல சிறுபான்மை வாக்காளர்களின் ஆதரவைக் (10 விழுக்காடு) கருத்து சேகரிப்பின் முடிவில் பெறத் தவறினால், அக்கட்சி அங்கே போட்டியிடாது என்பது திட்டவட்டம்.
"ஆகவே, பினாங்கு சட்டமன்ற பொதுத் தேர்தலில் சமவுடைமை போட்டியிடாமல் போனாலும் மாநில அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் பெரிய கட்சியின் கவனத்திற்கு மக்கள் நலன் சார்ந்த சில முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கும் என்பது உறுதி.
பினாங்கு மாநில மக்கள் மாநகர் மேயரையும், ஊராட்சி செயலவை உறுப்பினர்களையும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க ஊராட்சித் தேர்தல்; மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய மலிவு விலை வீடுகளுக்கு அடிப்படை சட்டத்தை இயற்றி வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்காமல் இருக்கச் செய்தல்; மக்களுக்கு எளிதில் பயனளிக்கும் விவேகப் பொது போக்குவரத்துச் சேவை மற்றும் மக்களின் பாதுக்கப்பு, சுகாதாரம் மற்றும் இயற்கை சுற்றுச் சூழலை அழிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களை எதிர்த்தல் ஆகியவையாகும்.


கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks