சூதாட்டம் ஒழிப்பு - கடமை தவறும் ஓசிபிடி மீது கடும் நடவடிக்கை பாயும்!

ஆயோப் கான் காட்டம்



கோலாலம்பூர், மே 18 - 
நாட்டில் சட்டத்திற்குப் புறம்பான இணையத்தள சூதாட்ட கடைகள் ஆங்காங்கே கட்டுக்கடங்காமல் நிகழ்ந்துவரும் வேளையில் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் அந்தந்த மாவட்ட காவல் துறையின் தலைவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை பாயும்.

மலேசிய தேசியக் காவல் படையின் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் ஆணையர் அயோப் கான் மைடின் பிட்சே அவர்கள் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

முக்கியமாக கோலாலம்பூர் தலைநகரிலுள்ள சில பகுதிகளில் கள்ளத்தனமாக நிகழும் சூதாட்டத்தின் மீது புக்கிட் அமானிலுள்ள சிறப்புப் படை தலையிட்டு அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுப்பதால் சில மாவட்ட காவல் துறையின் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளது தொடர்பாக தன்னிடம் புகார் வந்ததாக அயோப் கான் மேலும் அம்பலப்படுத்தினார்.

"என்னுடைய சிறப்புப் படை அதிரடி நடவடிக்கையில் இறங்குவது சில மாவட்ட காவல் துறைத் தலைவர்களுக்கு அதிருப்தியைத் தந்துள்ளது எனக்கு நன்குத் தெரியும்.

"மாவட்ட காவல் தலைவர்களுக்கு நான் முக்கியமான ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். "ஒருவேளை நீங்கள் உங்கள் மாவட்டங்களில் நிகழும் கள்ள சூதாட்ட குற்றச்செயல்களை துடைத்தொழிக்கத் தவறினால், புக்கிட் அமானிலிருந்து எனது படை அதிரடி நடவடிக்கையில் இறங்கும்.

"நான் எனது சிறப்புப் படையை களத்தில் இறக்கி திடீர் சோதனையை மேற்கோள்வேன். "இந்த விவகாரத்தில் கடமையைச் செய்யத் தவறும் மாவட்ட காவல் துறைத் தலைவர்களுக்கு என்னிடமிருந்து இனி எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் வராது. எந்த ஒரு பாரபட்சமின்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று  திட்டவட்டமாகக் கூறினார்.

மேலும், ஒவ்வொரு மாதமும்  மாவட்டக் காவல் துறைத் தலைவர்கள் சூதாட்ட குற்றச் செயலைத் துடைத்தொழிப்பதில் உறுதிமொழி வழங்குகின்றனர் என்பதால் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு எச்சரிக்கை வழங்குவதில் எந்த ஒரு பயனும் இல்லை.

மாதாந்தோறும் உறுதிமொழி வழங்கும் அவர்கள் அவ்வாக்கினை நிறைவேற்றப் பாடுபட வேண்டுமே ஒழிய கையைத் துடைத்து வீசும் காகிதம் போன்று  மதிப்பற்றதாக செய்து விடக்கூடாது என்று நினைவுபடுத்தினார்.

"இந்தச் சூதாட்ட குற்றச்செயல் விவகாரத்தில் நான் ஓவ்வொரு முறையும் எச்சரிக்கை மற்றும் ஆலோசனை வழங்கும்  நேரம் இனி கிடையாது.

"நடவடிக்கை எடுக்கத் தவறும் ஒவ்வொரு மாவட்ட காவல் துறைத் தலைவர்கள் மீதும் கடும் நடவடிக்கைப் பாயும் என்பது உறுதி," என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு மாவட்டக் காவல் தலைவர்களும் கடமையுணர்வு, கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றைத் தங்களது அன்றாட கடமையின் கோட்பாடாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

அண்மையில், கோலாலம்பூரிலுள்ள காவல் படைத் தலைமையகத்தின் புதிய காவல் படைத் தலைவர் பதவியேற்பு சடங்கில் கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பினாங்கு மாநிலத்தின் முன்னாள் காவல் படைத் தலைவர் ஆணையர் முகமட் சுஹைலி முகமட் சேன் தலைநகரின் புதிய காவல் படைத்தலைவராக  அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement