கோலாலம்பூர், மே 13 -
சுகாதாரத் துறையில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு சமாளிப்பதில் தாதியர்கள் முதுகெலும்பாகச் செயல்படுகின்றனர் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபா கூறினார்.
"நம் தாதியர், நமது எதிர்காலம்" எனும் கருப்பொருளுடன் கொண்டாடப்படும் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்ட அவர், தாதியர்கள் மக்களுக்குச் சிறந்த சுகாதார சேவையை வழங்குவதில் துடிப்புடனும் பொறுப்புணர்ச்சியுடனும் செயலாற்றுகின்றனர் என்று அவர் பெருமிதத்துடன் சொன்னார்.
தாதியர்கள் சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக திகழ்கின்றனர். இத்துறையில் ஏற்படுகின்ற சவால்களை எதிர்கொள்வதில் நமக்கு பேருதவியாகப் இருக்கின்றனர்.
"அவர்களின் சேவை நோயாளிகளுக்கு சிகிச்சையை மட்டும் வழங்குவதோடு நின்றுவிடவில்லை, மாறாக மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நோயாளிகளுக்கும் குடும்பத்தினருக்கும் ஆதரவு வழங்குகின்றனர்.
"ஆகவே, இந்த உலக தாதியர் தினத்தில், அவர்கள் செய்த தியாகத்திற்கும் தன்னலமற்ற சேவைக்கும் நான் தலைவணங்குவதோடு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று சலிஹா மேலும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, தாதியர்களின் சேவை, கடமையுணர்வு இல்லாமல் நம்மால் சிறந்த சுகாதாரத் துறையை மக்களுக்கு அமைத்து தர இயலாது என்றார். "நீங்கள் தாதியரைச் சந்தித்தால் அவர்களிடம் உங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்.
தாதியர்கள் தங்களின் சேவையின் மூலம் சிறந்த அங்கீகாரத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காக நாம் அனைவரும் அவர்களுக்கு வற்றாத ஆதரவை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks