கோலாலம்பூர், மே 10 -
வலையொளியில் இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்திய சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளது.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் தலைநகரிலுள்ள வங்சா மாஜூ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக மலேசிய காவல் படையின் செயலாளர் துணை ஆணையர் நூர்சியா முகமட் சாடுடின் இன்று புக்கிட் அமானில் வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி தெரிவித்தார்.
"சந்தேகத்துக்குரிய அந்நபர், வலையொளியில் பரவிய காணொளியில் 'சலாம்' வார்த்தையைத் தவறாக விமர்சித்துள்ளார்.
"இப்போது அந்த நபர் இன்று தொடங்கி எதிர்வரும் 13ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடர் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்," என்றார்.
இந்த சம்பவத்தை புக்கிட் அமான் குற்றவியல் துறையின் டி5 சிறப்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரித்து வருகிறது.
சம்பந்தப்பட்ட அந்த ஆடவரிடமிருந்து இரு கைத்தொலைப்பேசியையும் காவல் துறையினர் கைப்பற்றியதாக அவர் சொன்னார்.
"செக்ஷன் 41 (1), 298ஏ குற்றவியல் வன்முறை சட்டம், செக்ஷன் 233 தொலைத்தொடர்பு பல்லூடக சட்டம் 1998 கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks