ஜார்ஜ்டவுன், மே 10 -
பினாங்கு மாநகரத்தின் புதிய மேயராக டாக்டர் ஏ.இராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அம்மாநகரத்தின் செயலாளராக சேவையாற்றி வந்த அவர் இன்று அதிகாரப்பூர்வமாக புதிய மேயராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இதற்கு முன் அப்பதவியை வகித்த யீவ் துங் சியாங் அவர்கள் கடந்த மே 5 ஆம் தேதியன்று கட்டாய பணி ஓய்வுப் பெற்றதால், காலியான அப்பதவிக்கு 60 வயது இராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டதாக பினாங்கின் முதலமைச்சர் சோவ் கொன் யோவ் தெரிவித்தார்.
விவேகம், பசுமை குடும்ப முன்மாதிரி மாநிலம் பினாங்கு 2030 எனும் கருப்பொருளுக்கு ஏற்ப இராஜேந்திரன் திறம்பட சேவையாற்றி இந்த முத்து மாநிலத்தை அனைத்துலக தரம் வாய்ந்த மாநிலமாக உறுவெடுப்பதை உறுதி செய்வார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"இராஜேந்திரனின் நியமனத்தால் மாநகரின் உறுப்பினர்களிடத்தில் அனுக்கமான ஒத்துழைப்பு வலுவாகி ஒட்டுமொத்த மக்களின் சேவைத் தரத்தை உயர்த்துவதில் முணைப்புடன் செயல்படுவார்கள் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.
இராஜேந்திரனின் சேவையாற்றலிலும், பரந்த அனுபவத்தின் மீதும் தாம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தனது சிறப்பான சேவையால், பினாங்கு மாநகரத்தை உலகத் தரம் வாய்ந்த மாநகரமாக உறுவெடுப்பதில் பெறும் பங்காற்றுவார் என்று அவர் மேலும் சொன்னார்.
இங்குள்ள ஜாலான் கோத்தா லாமா சாலையில் அமைந்துள்ள மாநகர மண்டபத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில், இராஜேந்திரன் 41ஆவது மேயராக பதவியேற்றார்.
இந்த நிகழ்வுக்கு மாநில இரு துணை முதலமைச்சர்களான அகமது சாகியுட்டின் அப்துல் ரஹ்மான், பேராசிரியர் பி.ராமசாமி, மாநிலச் செயலாளர் முகமட் சாயுதி பாக்கார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதனிடையே, தம்மிடம் வழங்கப்பட்டுள்ள இந்த முக்கியப் பொறுப்பின் மூலம் பினாங்கு மாநகரத்தை ஆற்றல் மிக்க, மகிழ்ச்சியான பெருநகரமாக திகழச் செய்வதே தமது முக்கிய குறிக்கோளாகும் என்று சூளுரைத்துள்ளார்.
கடுமையான சாலைப் போக்குவரத்து நெரிசல், தூய்மைக்கேடு ஆகிய பிரச்சனைகளைச் சந்தித்து வரும் பினாங்கு மாநிலம், தற்போது அதிக சுற்றுப்பயணிகளின் வருகையை எதிர்கொள்வதால், இந்த இரு விவகாரங்களையும் உடனடி தீர்வு காணும் தலையாயப் பொறுப்பு தமக்கு இருப்பதாக அவர் தெளிவுப்படுத்தினார்.
"நாங்கள் ஏராளமான நிழல்குடையுடன் நடைபாதைகளை மக்களுக்காக உருவாக்குவோம். நகர மத்தியில் கடுமையான சாலை நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் நடைப்பழக்கத்தை ஊக்குவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்றார்.
"மேலும் பினாங்கு மாநகரம் என்றும் பசுமையுடன் செழிப்புடன் இருப்பதற்காக நிறைய மரங்கள் நடப்படும் ," என்று அவர் மேலும் கூறினார்.
இருக்கின்ற சாலைகளை விரிவுபடுத்துவது மட்டும் தீர்வாகாது. ஒவ்வொரு காரியத்தையும் முன்னெடுக்கும் முன் அதற்கு மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மிக முக்கியம் என்றார்.
இராஜேந்திரன் 1986ஆம் ஆண்டில் மாநகரப் பொறியியல் துறையில் சேர்ந்து சேவையாற்றத் தொடங்கிய வேளையில் 37 ஆண்டு சேவைக்குப் பிறகு கடந்த ஆண்டில் மாநகரத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks