தேவா இன்னிசை: 15,000 டிக்கெட் விற்றுத் தீர்ந்தது, 2,000 கூடுதல் டிக்கெட் விரைவில்! - சிட்டி புரோடக்சன் ரிஷி சரவணன்
கோலாலம்பூர், மே 3 -
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலேசியாவில் முதல் இன்னிசை மழையுடன் நம்மை மகிழ்விக்க வருகிறார் சலோமியா கானா பாடல் புகழ் தேனிசைத் தென்றல் தேவா.
எதிர்வரும் ஜூன் 3ஆம் நாள் புக்கிட் ஜாலில் விளையாட்டு அரங்கில் ஜனரஞ்சகமான இசையால் நம்மை தாலாட்ட வருகிறார் 90 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தனது தேனிசையால் ராஜ்யம் செய்த தேவா.
இந்த இன்னிசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் இணையத்தளத்தில் விற்பனைக்கு திறக்கப்பட்டது. இதுவரையில் 15,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டதாக அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ரிஷி சரவணன் அவர்கள் ஒலியும் ஒளியும் ஊடகத்திடம் தெரிவித்தார்.
இருப்பினும், தேவாவின் இன்னிசையைக் காண்பதற்காக இன்னும் பல்லாயிரக்கணக்கான மலேசிய மக்கள் ஆவலுடன் டிக்கெட்டுகளை வாங்க முன்டியடித்துக் கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
இச்சூழலைக் கருத்தில் கொண்டு இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு கூடுதலாக இன்னும் 2,000 டிக்கெட்டுகளை விற்பனைக்காக வெளியிடவிருப்பதாக அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.
இதுமட்டுமின்றி, ஏற்பாட்டாளர் குழு தற்போது புக்கிட் ஜாலில் தலைமை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். இன்னிசை நிகழ்ச்சிக்காக சில கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரும் விதமாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.
தேவாவின் நிகழ்ச்சியன்று முதியோர்கள், ஊடக் ஊனமுற்றோர், சிறுவர்கள், கர்ப்பினிப் பெண்கள் ஆகியோருக்காக அரங்கில் சிறப்பு நுழைவு வாயிலைக் கேட்டு இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த அதீத வரவேற்பைப் பார்க்கும் போது எங்களின் முதல் முயற்சியான இந்தத் தேனிசைத் தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சி நிச்சயம் மக்களின் அலைகடலால் மாபெறும் வெற்றியைப் பதிவு செய்வதோடு இசைப்பிரியர்களுக்கும் ஆத்ம திருப்தியைத் தரும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.


கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks