சீனச் சுற்றுப்பயணி மிரட்டப்பட்ட குற்றச்சாட்டை காவல்துறை விசாரணை


கோலாலம்பூர், ஏப்ரல் 4- 
தம்மை காவல் அதிகாரி ஒருவர் சோதனை நடவடிக்கையின் போது மிரட்டி பணம் கேட்டதாக கூறும் சீன நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பெண்மனியின் குற்றச்சாட்டினை காவல் துறை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

அச்சம்பவம் தொடர்பான டிக்டாக் காணொளி ஒன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. டாங் வாங்கி மாவட்ட காவல்  தலைமையகம் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையை முடக்கி விட்டுள்ளதாக, கோலாலம்பூர் இடைக்கால காவல் படைத் தலைவர், துணை ஆணையர் டத்தோ யாஹாயா ஒஸ்மான் உறுதிப்படுத்தினார்.

நேற்றிரவு சுமார் 11 மணிக்கு, சமூக வலையத்தளத்தில் பரவிய சம்பந்தப்பட்ட காணொளியை காவல் துறை கண்டுபிடித்தது. சுமார் ஒரு நிமிடம் 48 வினாடிகள் பதிவாகியுள்ள அந்த காணொளி தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, Tiktok@cs_kuan எனும் பதிவடையாளத்தைக் கொண்ட பெண் நபரால் பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

"அப்பதிவில், காவல் அதிகாரி ஒருவர் எந்த ஒரு முறையான பயண கடப்பிதழ்களையும் கொண்டிராத அந்நிய பெண் சுற்றுப் பயணியைச் சோதனை செய்துள்ளார்.

"இருப்பினும், பயணக் கடப்பிதழ் கொண்டிராததால், அந்த அதிகாரி தம்மை மிரட்டியதாகவும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரிங்கிட் மலேசிய 200 கையூட்டாகக் கேட்டதாகவும் அந்த சீன நாட்டுப் பெண்மனி அந்தக் காணொளிப் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார்," என்று யாஹாயா இன்று மாலையில் ஓர் அறிக்கையின் வழி உறுதிப்படுத்தினார்.

இதன் தொடர்பாக, டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகம் விசாரணை அறிக்கை ஒன்றை தொடங்கியுள்ளதாக டத்தோ யாஹாயா மேலும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், காவல் துறை இந்த சம்பவத்தை குற்றவியல் பிரிவு செக்‌ஷன் 384 மற்றும் செக்‌ஷன் 233 தொலைத் தொடர்பு, பல்லூடக சட்டம் 1998 கீழ் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியும் அந்த சுற்றுலாப் பெண்மனியும் விரைவில் டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை அதிகாரியால் வாக்குமூலம் பெறப்படும் என்றார்.

"அந்த இருவரிடமும் வாக்குமூலம் எடுக்கப்பட்டதும், விசாரணை அறிக்கையைத் தயார் செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக விரைவில் வழக்குரைஞர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வேளையில், சமூக வலைத்தளங்களில் பரவும் எந்த ஒரு தகவலையும் காணொளியையும் பொதுமக்கள் அவசரப்பட்டு முழுமையாக நம்பி ஏமாறாமல் அதன் நம்பகத்தன்மையை காவல் துறையிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement