கம்போங் பூங்கா ராயா நீண்ட வீடுகள் விவகாரம் : பிரச்சினைகளை நேரடியாகக் கண்டறிந்தார் டத்தோ ரமணன்!


சுங்கை பூலோ, ஏப்.9-
சுபாங், கம்போங் பூங்கா ராயா நீண்ட வீடுகளில் வசித்து வருகின்ற 30க்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்களின் வாழ்வாதார நிலை கண்டு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் மனம் வருந்தினார்.

கடந்த வாரம் மக்களவைக் கூட்டத் தொடர் நிறைவுற்றதைத் தொடர்ந்து, நேற்று மதியம் அவ்வீடமைப்புப் பகுதிக்கு திடீர் விஜயம் புரிந்த அவர், சிதிலமடைந்திருக்கும் பலகை வீடுகளில் பாம்பு தொல்லைகளுக்கு மத்தியில் அம்மக்கள் வாழ்ந்து வருகின்ற இக்கட்டானச் சூழ்நிலையை நேரடியாகக் கண்டறிந்தார்; அவசரத் தீர்வுக்கு ஆலோசித்தார்.

கடந்த வாரம் அப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள புதர்களை சுத்தம் செய்வதற்கு டத்தோ ரமணனின் சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையம், உதவிக்கரம் புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் களப்பார்வையில் இறங்கிய டத்தோ ரமணன், அரசு கேந்திரத்தின் துணையோடு அப்பகுதியில் கூட்டுத் துப்புரவுப் பணி மேற்கொள்வதற்கு கேட்டுக் கொண்டார். 

சுற்றுப்புற தூய்மையைப் பேணிக்காக்கும் வகையில், வீடமைப்புப் பகுதியின் முக்கோடியில் பெரிய குப்பைத் தொட்டி ஒன்றை பொருத்துவதற்கும் அவர் ஆலோசித்தார். 

மேலும், பழுதடைந்திருக்கும் வீட்டுக் கூரைகளையும் கரையானால் அரிக்கப்பட்டிருக்கும் பலகைத் தூண்களையும் அகற்றிப் புதுப்பிக்கும் பணிகள் குறித்தும், குடியிருப்பாளர்களுக்கான மண்டபத்தை சீரமைக்கும் வேலைப்பாடுகள் குறித்து முழு ஆய்வு மேற்கொள்ள குத்தகையாளரை பணித்தார். 
 
ஒரு மேம்பாட்டு நிறுவனமான நில உரிமையாளருக்கும் இக்கிராமத்து மக்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வருகின்ற வீட்டுமனைப் போராட்டம் குறித்த தற்காலிக நிலவரத்தையும் கேட்டறிந்த டத்தோ ரமணன், நிரந்தத் தீர்வுக்குரிய வழிமுறைகள் ஆராயப்படும் என்றார்.

அதற்கு இடையில், குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற அடிப்படை வசதிகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு அவசரத் தீர்வு காணப்படும் என்று டத்தோ ரமணன் அறிவித்தார்.

சுமார் ஒரு  மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது, குடியிருப்பாளர் சங்கத்தின் செயலாளர் பத்மநாதனும் அவர்தம் குழுவினரும் உடனிருந்து, தங்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் டத்தோ ரமணனிடம் தெரிவித்தனர்.

திடீர் விஜயம் புரிந்து, தங்களின் நிலவரத்தைப் பொறுமையாகக் கண்டறிந்தமைக்கும் கோரிக்கைகளைக் கேட்டறிந்தமைக்கும் குடியிருப்பாளர் சங்கம் மனம் நெகிழ்வதாக பத்மநாதன் குறிப்பிட்டார்; விடியலுக்காகக் காத்திருப்பதாகவும் மனம் வெதும்பினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement