ஒரு ரிங்கிட் பெருநாள் புத்தாடை விற்பனை கலவரத்தில் முடிந்தது

முதல் 100 பேருக்கு சலுகை ஆனால் வந்ததோ 500 பேர்!!



ஷாஆலாம், ஏப்ரல் 3 - 
நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை ரிங்கிட் மலேசியா 1 எனும் மலிவு விலையில் புத்தாடைகளை விற்பனை செய்த கடை ஒன்றில் மக்கள் திடீரென புற்றீசல் போல புகுந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

ஷாஆலாம் மாவட்ட காவல் படைத் தலைவர், உதவி ஆணையர் முகமது இக்பால் இப்ரஹிம் கூறுகையில், அச்சம்பவம் தொடர்பில் புகார் ஒன்றை காலை மணி 10.30க்கு சம்பந்தப்பட்ட கடை நிர்வாகியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறினார்.

"உண்மையில் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த 1 வெள்ளி மலிவு விலைப் புத்தாடை சழுகை வழங்கப்பட்டுள்ள வேளையில் இதர 50 வாடிக்கையாளர்களுக்கு இலவச குர்த்தா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

"இருப்பினும், இந்த சிறப்பு விளம்பரத்தைக் கேள்விப்பட்டு, சுமார் 500 பேர் திடீரென நான் முந்தி நீ முந்தி என சரியாக காலை 10.30 மணிக்கு அந்த கடை தனது வியாபாரத்தைத் தொடங்கியபோது முற்றுகையிட்டனர்.

"இதன் விளைவாக அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதோடு, ஒருவருக்கொருவர் தள்ளு முள்ளில் ஈடுபட்டனர்," என்று நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

மேலும், தமது கடையில் கூடிய மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாமல் தினரிய உரிமையாளர் நிலைமை மோசமடையாமல் இருக்க மக்களின் பாதுகாப்பு நலன் கருதி அக்கடையை உடனடியாக மூடினார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகளின் அலோசனைக்கொப்ப, அக்கடை சரியாக காலை மணி 11.45க்கு மூடப்பட்டதாக முகம்மது இக்பால் மேலும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் இதுவரை இச்சம்பவம் தொடர்பாக எந்த ஒரு புகாரையும் காவல் துறையினர் பெறவில்லை என்று உறுதிபடுத்தினார்.

இவ்வேளையில், பெருநாள் காலங்களில் வெளியிடப்படும் எந்த ஒரு விளம்பரத்தையும் மக்கள் எளிதில் நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என்று முகம்மது இக்பால் கேட்டுக் கொண்டார்.

"மேலும், சம்பந்தப்பட்ட வியாபாரி, மக்களைக் குழப்பமடையச் செய்யும் மலிவு விலை விற்பனைத் தொடர்பான விளம்பரங்களை பிரசுரிக்கவோ சமூக வளைத்தலங்களில் வெளியிடும் செயலைத் தவிர்க்க வேண்டும்," என்று அறிவுறுத்தினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement