குளியலறையிலிருந்து தாமதமாக வெளியேறியதற்காக கடிந்த அண்ணனைத் தாக்கிய ஆடவர்

தடுப்புக்காவலில் 23 வயது ஆடவன்


கோலாலம்பூர், ஏப்ரல் 16 -
குளியலறையிலிருந்து தாமதமாக வெளியேறியதற்காக தாய் கண்டித்ததால், ஆத்திரமடைந்த ஆடவன், தாயிடம் வாய் தகராற்றில் ஈடுபட்டதோடு மட்டுமின்றி அதனைத் தட்டிக்கேட்ட உடன்பிறந்த அண்ணனையே கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தாக்கினான்.

இந்த பரபரப்புச் சம்பவம் தலைநகரிலுள்ள புக்கிட் அங்காசா வீடமைப்புப் பகுதியிலுள்ள அந்த சந்தேகத்துக்குரிய ஆடவன் வீட்டில் நேற்று நிகழ்ந்ததாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்தின் உதவி ஆணையர் அமிஹிசாம் முகம்மது சுக்கோர் உறுதிபடுத்தினார்.

நேற்று அதிகாலை மணி 4க்கு நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது அந்த சந்தேகத்துக்குறிய நபர் தாமதமாக குளியலறையிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால், கோபமுற்ற அவன் தாயர், தன் மகனைக் கடிந்துள்ளார். 

"இதனால், தாயின் கண்டிப்பை ஏற்க இயலாத சந்தேகத்துக்குரிய அந்நபர் தன் தாயைக் கண்டபடி தகாத வார்த்தைகளால் திட்டி வாய்த் தகராற்றில் ஈடுபட்டுள்ளான்.

"இதனைக் கண்ட அவனது மூத்த சகோதரன் தனது தம்பியைத் தடுத்து திட்டியுள்ளான். "உடனே கொபமடைந்த அவ்வாடவன், உடனே தன் அண்ணனை ரப்பர் குழாய், கத்தி மற்றும் இரும்புத் தடியைக் கொண்டு மூர்க்கமாகத் தாக்கினான்," என்று இன்றிரவு வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

இந்த தாக்குதலால், பாதிக்கப்பட்ட ஆடவர் உடலில் சில காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக, பாதிப்புக்குள்ளான அந்த நபரின் புகாரின் அடிப்படையில், காவல் அதிகாரிகள் தாக்குதலை மேற்கொண்ட அந்த 23 வயது மதிக்கத்தக்க உள்நாட்டு ஆடவனை சம்பவம் நடந்த வீட்டிலேயே கைது செய்தது.

தற்போது அந்த சந்தேகத்துக்குரிய நபர் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை, அடுத்தக்கட்ட விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

மேலும், அந்த நபர் இதற்கு முன்னர் குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் சார்ந்த செயலில் ஈடுபட்டிருந்தது தொடர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல் துறை இந்த சம்பத்தை செக்‌ஷன் 324 குற்றவியல் வன்முறை பிரிவின் கீழ்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த ஆடவனுக்கு, 10 ஆண்டுகள் சிறை அல்லது, தண்டம், அல்லது பிரம்படி அல்லது இவற்றில் ஏதெனும் இரு தண்டனைகள் விதிக்கப்படலாம்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement