கோலாலம்பூர், ஏப்ரல் 5-
முதல் மலேசியராகவும் முதல் ஆசியராகவும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்று சாதனைப் படைத்துள்ள டான்ஶ்ரீ மிஷெல் யோ ஒரு மாதத்திற்குப் பின் தாயகம் திரும்புகிறார்.
ஈப்போவைப் தமது பிறப்பிடமாகவும் பூர்வீகமாகவும் கொண்ட அந்த நடிகை தமது ரசிகர்களைக் காண்பதற்காக மலேசியாவிற்குத் திரும்புகிறார் என்று தி மலாய் மேல் செய்தி ஊடகம் மேற்கோல் காட்டி அத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஆனால் அவர் எந்த தேதியில் மலேசியாவிற்கு திரும்புகிறார் என்று இதுவரை உறுதியாகவில்லை. அவரின் வருகைக்காகவும் உலக திரைப்பட விழாவில் உயரிய விருதினை வென்று கௌரவிக்கப்பட்டிருக்கும் அந்த தங்கத் தாரகையை கொண்டாடி மகிழ மலேசிய மக்கள் மிக ஆவலுடன் இருக்கின்றனர் என்பது உறுதி.
விரைவில் நாடு திரும்பும் அவர், பங்சார் வட்டாரத்திலுள்ள பெவிலியன் கேளிக்கைப் பேரங்காடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிகப்புக் கம்பள நிகழ்வு ஒன்றில் தமது லட்சக்கணக்கான ரசிகர்களை மாலை 5.30 மணிக்குச் சந்திக்கவிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிஷெல் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பகிரும் நிகழ்வு எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் பொதுமக்களுக்கு இலவசமாகத் திறந்துவிடப்படும்.
மேலும், அந்நிகழ்விற்குப் பிறகு மிஷெல் குடும்ப உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்களை மட்டும் உட்படுத்திய இரவு விருந்தோம்பல் நிகழ்வொன்றில் கலந்துகொள்வார்.
மிஷெல் தன் தாயின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 60 வயதான மிஷெல் முதல் மலேசியராக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்று வரலாறு பதித்துள்ளார்.
"Everything Everywhere All at Once" எனும் திரைப்படத்தில் தமது அபார நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த முன்னணி நடிகைக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
அவ்விருதைப் மேடையேறி பெற்றுக்கொண்ட அவர், இந்த வெற்றியை தன் தாய் டத்தின் ஜேனட் யோ அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக பெருமிதத்துடன் லாஸ் எஞ்ஜலசில் வெகு விமரிசையாக நடைப்பெற்ற அந்நிகழ்வில் கூறினார்.
ஆஸ்கார் விருதை வெல்லும் முன்பு, மிஷெல் நகைச்சுவைப் பாத்திரத்தில் சிறந்த படைப்பை வெளிப்படுத்தியதற்காக கோல்டன் குலோப் விருது வென்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks