பெருநாளை முன்னிட்டு சாலை குற்றங்களுக்கு தண்டம் ரிம.50 மட்டுமே - பிரதமர் அறிவிப்பு



புத்ராஜெயா, ஏப்ரல் 18 -
இவ்வார இறுதியில் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு சாலைக் குற்றங்களுக்கான தண்டத்தைச் செலுத்துவதற்கு சிறப்புத் தொகையை மலேசிய மக்களுக்கு அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இந்தச் சிறப்புத் தொகை சாலை குற்றச்செயலுக்கான தண்டம் எதிர்வரும் ஏப்ரல் 21 முதல் மே மாதம் 21ஆம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்படும் என்று பிரதமர் டத்தொஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.

கடந்த 2022 ஆண்டு, அதற்கும் முந்தைய ஆண்டுகளில் பெறப்பட்ட காவல் துறை சாலை குற்றங்களுக்கான தண்டத்தை 50 வெள்ளியில் மட்டுமே செலுத்திவிடலாம்.

"ஆயினும் இந்த சலுகை, இந்த 2023ஆம் ஆண்டில் பெறப்பட்ட தண்டங்களுக்குக் கிடையாது," என்று பெர்டானா புத்ராவில் நடைபெற்ற சிறப்புப் பத்திரிகையாளர் சந்திப்பில் தம்பூன் நாடளுமன்ற உறுப்பினருமான அன்வார் தெரிவித்தார்.

இதனிடையே பெருநாளை முன்னிட்டு அரச மலேசிய காவல் படை "ஓப்ஸ் லன்சார்" எனும் சாலை பாதுகாப்பு நடவடிக்கையை இன்றும் நாளையும் தொடங்கவிருக்கிறது.

இந்த ஓப்ஸ் லன்சார் அதிகமாக நெரிசல்கள் ஏற்படும் இடங்களைக் குறி வைத்து காவல் துறையால் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

மேலும், ஓப்ஸ் செலாமாட் நடவடிக்கையை காவல் படை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கி 7 நாட்களுக்கு நாடு முழுவதும் அமலாக்கப்படும் என்றார்.

ஓப்ஸ் செலாமாட் மூலம், வாகனமோட்டிகள் சாலைக் குற்றச்செயலில் ஈடுபடாமல் ஒழுக்கத்துடனும் மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காமல் இருப்பதை உறுதிபடுத்தவும் காவல் படையினர் 24 மணிநேரம் ரோந்துப் பணியில் ஈடுபடவிருக்கின்றனர்.

விதிக்கப்பட்ட சட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை நிச்சயம். ஆறு வகையான சாலை குற்றச்செயல்களைப் புரிபவர்கள் சம்மன் வழங்கப்படாமல் நேரடியாக நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்படுவர்.

இது தொடர்பாக, தேசியக் காவல் படைத் தலைவர் டான்ஶ்ரீ அக்ரேல் சானி அப்துல்லா சானி அவர்கள் அதிகாரப்பூர்வமாக ஓப்ஸ் செலாமாட் பாதுகாப்பு நடவடிக்கையை வியாழனன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement