கோலாலம்பூர் மார்ச் 26 -
கோலாலம்பூர் காவல் படைத் துறையின் வருங்காலத் தலைவராகப் போவது துணை ஆணையர் டத்தோ யாஹயா ஒத்மான் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் அப்படையின் இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது மாநகரின் துணைத் தலைவராக சேவையாற்றும் அவரின் இந்நியமனம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கு முன்னர் கோலாலம்பூர் காவல் படையின் தலைவராக பணியாற்றிய ஆணையர் டத்தோ அஸ்மி அபூ காசிம் அவர்கள் புக்கிட் அமான் நிர்வாகத் துறையின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக யாஹயா இப்போது இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைநகரிலுள்ள அதன் தலைமையகத்தில் நடந்த அதிகாரபூர்வ சடங்கில் புக்கிட் அமான் லோஜிஸ்திக் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இயக்குனர் ஆணையர் டத்தோஶ்ரீ சாஹாபுடின் அப்துல் மானான் கலந்துகொண்டு பூர்த்திசெய்தார்.
பதவி மாற்றம் காணும் சம்பந்தப்பட்ட அவ்விரு உயர் அதிகாரிகளுக்கும் அவர் தமது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டார்.
இதற்கு முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாளன்று அஸ்மி கோலாலம்பூர் காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு முன் அவர் இதே புக்கிட் அமான் நிர்வாகத்துறையின் துணை இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொது காவல் துறையிலிருந்து கட்டாய பணி ஓய்வு பெற்ற முன்னால் இயக்குனர் டத்தோஶ்ரீ ஜைனி ஜாஸ் அவர்கள் விட்டுச் சென்ற நிரப்பும் பொருட்டு அப்பதவிக்கு அஸ்மி நியமிக்கப்பட்டுள்ளார்.
"கடந்த ஈராண்டுக்கும் மேலாக தலைநகர் காவல் படையை மிகச் சிறப்பாக வழி நடத்திச் சென்றதற்காக அஸ்மிக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.
"இயக்குனராக பதவி உயர்வு கண்டிருக்கும் அவர் மேலும் பல சாதனைகளைப் புரிந்து காவல் துறைக்கும் நாட்டிற்கும் பெருமை தேடித் தருவார் என்று உளமார வாழ்த்துகிறேன்.
"மேலும், இடைக்காலத் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் யாஹயா அவர்கள் அஸ்மி அவர்கள் பல அரியத் திட்டங்களின் மூலம் கோலாலம்பூர் காவல் படை மக்களின் மற்றும் மாநகரின் பாதுகாப்பையும் சுபிட்சத்தையும் நிலைநிறுத்தி அப்படையின் தரத்தை உயரிய நிலைக்குக் கொண்டு செல்வார் என்று பெரிதும் நம்புகிறேன்," என்றார் அவர்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks