எம்.பி. சம்பளத்தை வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் டத்தோ ரமணன்!


சுங்கை பூலோ, மார்ச் 26-
நாடாளுமன்ற உறுப்பினருக்கான தமது முழு சம்பளத்தையும் தொகுதியுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி, தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்.

15ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ தொகுதியை தாம் வாகை சூடினால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை தாம் எடுத்துக் கொள்ளப்போவதில்லை என்றும்,  மாறாக அப்பணம் சமூக நல நடவடிக்கைகளுக்குப் பயன்படும் வகையில் முறையாக பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்குப்  பகிர்ந்தளிக்கப்படும் என்றும் டத்தோ ரமணன் எழுத்துப் பூர்வமாக வாக்குறுதியளித்திருந்தார்.

இத்தகைய ஓர் அரிதான வாக்குறுதியை வழங்கி, நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த முதலாவது நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அவர் அறியப்பட்டார். மக்கள் பிரதிநிதியாக தேர்வு பெற்று, நாட்டுக்கும் மக்களுக்கும் மிகச் சிறந்த சேவையாற்றுவது  மட்டுமே  தமது தலையாய கொள்கையே தவிர, பதவியை வைத்துக் கொண்டு பணம் சம்பாதிப்பது தமது நோக்கம் அல்ல என்று தேர்தல் பிரச்சார மேடைகளில் அவர் முழங்கியிருந்தார்.

“டத்தோஸ்ரீ அன்வாரின் பிரதமராகும் கனவு மெய்ப்பட, சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியை பிகேஆர் வசம் வெல்வோம்” என்கிற சுலோகம் தாங்கி, மிகக் கடுமையான அரசியல் நெறுப்பாற்றில் நீந்தி வந்து கரை சேர்ந்த டத்தோ ரமணன், முன்னாள் அமைச்சரை வென்ற ஒரு புதிய சக்தியாகப் பார்க்கப்பட்டார்.

கடந்தாண்டு டிசம்பர் 19ஆம்  தேதியன்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட அந்தவொரு வரலாற்று திருப்பத்தில், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோ ரமணன் இடம் பிடித்தார்.

பதவியேற்புக்குப் பிறகு, மூன்று மாதங்கள் கழித்து தமக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை,  இங்கு பண்டார் பாரு சுங்கை பூலோவில் பிரசித்திப் பெற்ற தேவி ஸ்ரீ ராஜமாரியம்மன் ஆலயத்திற்கு அவர்  பகிர்ந்தளித்தார். நேற்று மாலை ஆலயத்திற்கு நேரடியாக வருகை புரிந்த அவர், நிர்வாகத் தலைவர் டத்தோ மூர்த்தியிடம் அதற்கான காசோலையை வழங்கி, ஆலயத்திற்கு தேவையான இதர வசதிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

எம்.பி. சம்பளத்தை வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கும் தேர்தல் வாக்குறுதியை, தங்கள் ஆலயத்திலிருந்து நிறைவேற்றியிருக்கும் டத்தோ ரமணனின் பெருந்தன்மையை தாங்கள் வெகுவாகப் பாராட்டுவதாக டத்தோ மூர்த்தி குறிப்பிட்டார். இந்த நன்கொடையின் நோக்கம் உணர்ந்து, சமூகநல மேம்பாட்டு நடவடிக்கைகளில் நாங்கள் கவனம் செலுத்துவோம்  என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  

இதனைத் தொடர்ந்து, தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கும் சீனர் ஆலயத்திற்கும் தமது சம்பளத்தை டத்தோ ரமணன் நேற்று பகிர்ந்தளித்தார். இனி, மாதந்தோறும் சுழல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு தமது சமபளப் பணம் பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

இந்த நிதியை பெறுகின்ற வழிபாட்டுத் தலங்கள், சமூகநல மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

இதனிடையே, நாட்டில் எம்.பி. சம்பளத்தை வழிப்பாட்டுத் தலங்களின் சமூக நல மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக வழங்கி, தேர்தலில் சொன்னப்படி செய்து காட்டியிருக்கும் முதலாவது உதாரண புருஷராக டத்தோ ரமணன் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement