விரைவில் பணி ஓய்வு பெறவிருக்கும் டத்தோஶ்ரீ அப்துல் ஜாலில் ஹசானிற்குப் பதிலாக யார் குற்றவியல் விசாரணைத் துறையின் அடுத்த இயக்குனராக வரவிருக்கிறார் என்ற கேள்வி மலேசிய மக்களிடத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்துள்ளது.
மேலும் அப்பதவிக்கு அயோப் கான் அவர்களே சரியானவர் என்றும் மக்களிடத்தில் விவாதமாக மிகப் பரவலாக இருந்து வந்தது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது அரச மலேசிய காவல் படையின் குற்றவியல் விசாரணைத் துறையின் புதிய இயக்குனராக டத்தோஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சே அவர்களே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருடைய இந்த நியமனம் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தத் தகவலை அரச மலேசிய காவல் படையின் செயலாளர் துணை ஆணையர் டத்தோ நூர்சியா முகமட் சாடுடின் ஓர் அறிக்கையின் வழி அதிகாரப்பூர்வமாக புக்கிட் அமானில் அறிவித்தார்.
தற்போது அப்பதவிலுள்ள ஆணையர் டத்தோஶ்ரீ அப்துல் ஜாலில் ஹசான் அவர்கள் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி கட்டாய பணி ஓய்வு பெறவிருக்கிறார். அவரின் இடத்தை நிரப்புவதற்காக தற்போது போதைப்பொருள் குற்றவியல் துறையின் இயக்குனராக சேவையாற்றும் அயோப் கான் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னர் அயோப் கான் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜோகூர் காவல் படையின் தலைவராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அயோப் கான் போதைப்பொருள் குற்றவியல் துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே காலக்கட்டத்தில் பஹாங் மாநில காவல் படைத் தலைவராக இருந்த அப்துல் ஜாலில் அவர்கள் குற்றவியல் விசாரணைத் துறையின் இயக்குனராக புக்கிட் அமானுக்கு மாற்றலாகினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks