பெட்டாலிங் ஜெயா மார்ச் 24 -
உரிமையாளரற்ற வீதி நாய்களை பிடிக்கும் நடவடிக்கையின்போது அதனைத் தடுக்க முற்பட்ட முதியவரை பெட்டாலிங் ஜெயா மாநகரக் கழக அதிகாரிகள் தாக்கிய அசம்பாவிதம் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சிக் கழகம் தகுந்த விளக்கமளிக்க வேண்டும்.
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுன் இந்த கோரிக்கையை விடுத்தார். இச்சம்பவத்தைச் சித்தரிக்கும் காணொளி சமூக வளையத்தளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லீ இன்று வெளியிட்ட அறிக்கையின் வழி, அந்த சம்பவம் தொடர்பான காணொளி பரவியதும், தமது அலுவலகம் சம்பந்தப்பட்ட மாநகர் கழகத்திற்கு இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரி அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக உறுதிபடுத்தினார்.
“அந்த நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்று பெட்டாலிங் ஜெயா மாநகர் கழகத்திடம் நான் விளக்கம் கோரியுள்ளேன்," என்றார்.
“சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டொழுங்கும் இதில் அடங்கும். மேலும் இது சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்," என்றார்.
சமூக வலையத்தளங்களில் பரவிய அந்த காணொளியில் முதியவர் ஒருவர் சம்பந்தப்பட்ட மாநகரக் கழக நடவடிக்கை அதிகாரிகளால் நாயை பிடிக்கும் இரும்புத் தடியால் தாக்கப்படுவது பதிவாகியுள்ளது.
அந்த முதியவர், தான் பராமரிக்கும் அந்த நாய்களை அதிகாரிகள் பிடியிலிருந்து தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இச்சம்பவம் பெட்டாலிங் ஜெயா ஜாலான் கிள்ளான் லாமாவிலுள்ள கணகபுரம் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்தது.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தைத் தொடர்பு கொண்டு நியூ ஸ்திரேட் டைம்ஸ் ஊடகம் விளக்கம் கோரியபோது, இவ்விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெட்டாலிங் ஜெயா மாநகரக் கழகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks