பெரிக்காத்தான் நெஷனல் உச்சநிலை செயற்குழு
விண்ணப்பத்தை நிராகரித்தது
கோலாலம்பூர், மார்ச் 21-
பெரிக்காத்தான் நெஷனல் அல்லது தேசியக் கூட்டணியில் இணைவதற்கு விருப்பம் கொண்டிருந்த பெஜுவாங் தானா ஆயிர் கட்சியின் எண்ணம் இறுதியில் பகல் கனவானது.
பெஜுவாங் கட்சியின் விண்ணப்பத்தை பெரிக்காத்தான் நெஷனல் கட்சியின் உச்சமன்ற செயற்குழு நிராகரித்தது. தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரான டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி அம்முடிவினைத் தெரிவித்தார்.
பெரிக்காத்தானில் இணைய ஆர்வம் காட்டிய பெஜுவாங் கட்சியின் விருப்பத்தை நேற்று உச்சநிலைச் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆக்கூட்டத்திற்கு பெரிக்காத்தானின் தலைவரும் முன்னால் பிரதமருமான டான்ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையேற்ற வேலையில் பாஸ் கட்சியின் தலைவருமான டான்ஶ்ரீ அப்துல் ஹடி அவாங்கும் கெராக்கான் தலைவர் டத்தோ டொமினிக் லாவும் கலந்துகொண்டார்கள்.
தீவிர கலந்துரையாடலுக்குப் பிறகு, பெரிக்காத்தானில் இணையும் பெஜுவாங்கின் விண்ணப்பத்தை அந்த உச்சநிலை செயற்குழு நிராகரித்தது.
மேலும், அச்செயற்குழு தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் பெரிக்காத்தான் நெஷனலின் சின்னத்தை கெடா, சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலத் தேர்தலிலும் பயன்படுத்தப்படும் என்ற உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது.
இதர கிளந்தான் மற்றும் திரங்காணு மாநில தேர்தலின் போது பாஸ் கட்சி சின்னம் பயன்படுத்தப்படும் என்று அவ்வறிக்கையில் ஜைனுடின் மேலும் கூறினார்.
அதுமட்டுமன்றி, சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் எந்த ஆறு மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநிலை செயற்குழு அந்த ஆறு மாநிலங்களில் செயல்படும் பெரிக்காத்தான் நெஷனல் தேர்தல் கேந்திரங்களுக்கு ஆணைப் பிறப்பித்துள்ளதாகக் கூறினார்.
இதனை அடுத்து பெரிக்காத்தான் நெஷனலின் தேர்தல் இயக்குனராக கெடா மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ முகமட் சனூசி மட் நோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சபா மாநிலத்தின் பெரிக்காத்தான் நெஷனல் தொடர்புக்குழுத் தலைவராக டத்தோஶ்ரீ ரோனல்ட் கியான்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கூட்டாரசுப் பிரதேசத்தின் தேசியக் கூட்டணியின் தொடர்புக்குழுத் தலைவராக முன்னால் கல்வி அமைச்சரும் புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் ராட்சி ஜீடின் பொறுப்பேற்றுள்ளார் என ஜைனுடின் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks