சுபாங் விமான நிலைய மறுமேம்பாட்டுத் திட்டம்: சுங்கை பூலோவின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திடும்! - டத்தோ ரமணன்




சுங்கை பூலோ, பிப்.11-
சுபாங் அனைத்துலக விமான நிலைய மறுமேம்பாட்டுத் திட்டம், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்கு நேர்மறை வளப்பத்தையும் பொருளாதார மறுமலர்ச்சியையும் கொண்டு வரும் என அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். 

தமது நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகின்ற சுபாங் விமான நிலையம், அதிநவீன மேம்பாட்டுத் திட்டத்திற்கு உட்படுத்தப்படுவதன் வழி, தொகுதி வாழ் மக்களுக்கு விமான போக்குவரத்துத் துறை உட்பட சுற்றுலா, ஹோட்டல், உணவுத் தொழில்துறைகளில் புதிய வாய்ப்புகள் அமையப்பெறும் என்று அவர் கூறினார். 

ஒரு காலத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த விமான நிலையத்தை மீண்டும் அதிநவீன வசதிகளோடு மேம்படுத்தும் அரசாங்கத்தின் இலக்குக்கு உந்து சக்தி அளிக்கும் வகையில், அந்நிய முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கு துறை சார்ந்த சில குறிப்பிட்ட வல்லுனர்களுடன் தாம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதாகவும் டத்தோ ரமணன் குறிப்பிட்டார். 

சுங்கை பூலோ தொகுதியில் புதிய பொருளாதார வாய்ப்புகளை கொண்டு வரவிருக்கும் இந்த மறுமேம்பாட்டுத் திட்டம், தொகுதி மக்களின் சமூக நலனை பாதிக்காத வண்ணம் இருப்பது உறுதிச் செய்யப்பட வேண்டும். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் சாலைகளையும் விரிவுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Paid Advertisement

மேலும், விமான போக்குவரத்து நடவடிக்கையினால் சுற்றுப்புற வீடமைப்புப் பகுதிகளில் அதிகளவிலான இரைச்சல் ஏற்படாமல் இருப்பதை விமான நிலைய அதிகாரத் தரப்பினர் பார்த்துக் கொள்ள வேண்டும் என பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு துணைத் தலைவருமான டத்தோ ரமணன் வலியுறுத்தினார்.

சுபாங் விமான நிலையம் மறுமேம்பாடு காணப்படும் நிலையில், சுங்கை பூலோ தொகுதியும் அதனூடே வளர்ச்சிப் பெற்ற நவீன நகரமாக புதுத்தோற்றம் பெறும் என தாம் பெரியும் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement