கோலாலம்பூர், பிப்.22-
குடியிருப்புப் பகுதிகளுக்கும் பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கும் இடையே வேன், இ-ஹெய்லிங் எனப்படும் டாக்சி சேவையின் ஒரு முன்னோட்டத் திட்டத்தை பிரசரனா மலேசியா பெர்ஹாட் நிறுவனமும் ஒரு போக்குவரத்து நிறுவனமான கும்புல் எனப்படும் நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன.
ஒரு பயணிக்கு ஒரு ரிங்கிட் எனும் நியாயமான கட்டணத்தில் பொதுமக்கள் இந்தப் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மற்ற பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கும் இந்தச் சேவையை விரிவுபடுத்த நாங்கள் தயார் என்றும் அவர் சொன்னார்.
மக்களவையில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர்.ரமணன் எழுப்பிய ஒரு துணைக் கேள்விக்குப் பதில் அளித்தபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
பொதுப் போக்குவரத்துச் சேவையை மக்கள் நிறைவான முறையில் பயன்படுத்திக் கொள்வதை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என டத்தோ ரமணன் கேள்வி எழுப்பினார்.
ஒரு முன்னோட்ட அடிப்படையிலான வேன் டாக்சி சேவை கோலாலம்பூர், வங்சா மாஜுவிலும் அலாம் மேகா, ஷா ஆலம், சிலாங்கூரிலும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிய வருகிறது.
ஒருவருக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் வகையில் பயணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கொள்கையை அறிமுகம் செய்வது குறித்து இ-ஹெய்லிங் நிறுவனங்களுடன் போக்குவரத்து அமைச்சு பேச்சு நடத்தி வருவதாகவும் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இதன்மூலம் இ-ஹெய்லிங் வாடகைக்கார் பயணிகளுக்கான கட்டண விகிதத்தை நேரடியாகக் குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks