ரவூப், பிப்.19-
சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாண்பொளிர் நாள் - வள்ளலார் பாலர்ப்பள்ளி பட்டமளிப்பு விழா, கடந்த வியாழனன்று பள்ளி மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.
பாலர் வகுப்பு தொடங்கி 6ஆம் வகுப்பு வரை வள்ளலாரின் மனித நேய தத்துவங்களின் அடிப்படையில் பெயர் சூட்டி, ‘அன்பும் அறிவும் உயர்வு தரும்’ எனும் கொள்கையை மாணவர்களிடத்தில் விதைத்து வருகின்ற இப்பள்ளி நிர்வாகம், வழக்கத்திற்கு மாறாக, மாண்பொளிர் நாள் எனும் தலைப்பில் பள்ளியின் பரிசளிப்பு விழாவை உணர்வுப்பூர்வமாக நடத்தி, பெற்றோர் - பிரமுகர்களின் நன்மதிப்பை பெற்றனர்.
“அனைத்து மாணவர்களிடத்தும் தனித்திறமை ஒளிந்திருக்கும். அதனை அடையாளம் கண்டு, கல்விக் கேள்விகளிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் அவர்களை தேர்ச்சிப் பெற்றவர்களாக முன்னேற்றுவதோடு ஆசிரியர்களின் கடமை முடிவதில்லை. அவர்களின் இதர தனித்திறமையையும் பட்டைத் தீட்டுகிறோம்; வள்ளலாரின் மனிதநேய வாழ்வியல் நெறிமுறைகளையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம்!
இதன் அடிப்படையில், எங்கள் மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் வீட்டுக்கும் நாட்டும் பெருமை சேர்ப்பவர்களாக உருவெடுப்பார்கள் என்ற நம்பிக்கையை நாங்கள் திடமாகக் கொண்டுள்ளோம்” என்று பள்ளியின் தலைமையாசிரியர் இல.கருணாநிதி தெரிவித்தார்.
அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டிருக்கும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு அரசாங்கம் உட்பட, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், பள்ளியின் முன்னாளர் மாணவர்கள் சங்கம், ரவூப் மாவட்ட அரசியல் - இந்து ஆலயத் தலைவர்கள், தமிழ்ப்பற்றாளர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் மிகப் பெரிய பங்காற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், பள்ளியின் மேன்மைக்கு பேருதவியாக இருந்து வருகின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
வள்ளலார் பாலர் பள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு விழாவோடு தொடங்கிய இந்த மாண்பொளிர் விழாவில், ரவுப் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை பிரதிநிதித்து அவரின் சிறப்பு அதிகாரி ராஜா ரஷ்டான் பின் தெங்கு பூஜி, மஇகா ரவுப் தொகுதித் தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வன், ரவூப் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள், ரவூப் இந்து ஆலய சபா நிர்வாகத்தினர், மலேசிய இந்து சங்கத்தின் ரவூப் வட்டாரப் பேரவையின் நிர்வாகத்தினர், மஇகா கிளைத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களின் வெற்றியை அங்கீகரித்து பாராட்டியும் அவர்களின் படைப்புகளுக்கு உற்சாக வரவேற்பும் கொடுத்து சிறப்பித்தனர்.
இப்பள்ளி மாணவர்கள் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்குவதோடு, மாவட்ட - மாநில - தேசிய அளவிலான பல போட்டிகளிலும் பங்குப்பெற்று மிகச் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks