இந்தியர்களின் கோரிக்கைகளுக்குப் பிரதமர் செவிசாய்ப்பு: தீர்வுக்கான நடவடிக்கைகளுக்குப் பங்களிப்பேன்! -டத்தோ ரமணன்
புத்ராஜெயா, பிப்.12-
இந்தியச் சமூகத்தின் மேன்மைக்கு வித்திடும் அரசாங்கத்தின் செயல்நடவடிக்கைகளில் தமது பங்களிப்பும் முழுமையாக இருக்கும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதியளித்தார்.
இந்திய சமூகத்தின் தேவைகளை தாம் நன்கு அறிந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சமூகத்துக்காகக் கேட்டுப் பெற வேண்டிய அனுகூலங்களை சரியான தளத்தில் நின்று பெறுவதற்குரிய முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இம்மாதம் 24ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நாட்டின் வரவு செலவு கணக்கில் (பட்ஜெட்), வசதி குன்றியிருக்கும் தமிழ்பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான திட்டத்திற்கு முதல் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் அறிவித்திருக்கிறார்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்குக் கல்வியே பிரதானம் என்கிற நம்பிக்கைக்கு ஏற்ப அமைந்திருக்கும் பிரதமரின் முதல்கட்ட அறிவிப்பு, இந்திய சமூகத்தின் மீது அவர் கொண்டிருக்கும் கரிசனத்தைக் காட்டுவதாக பிகேஆர் தகவல் பிரிவு துணைத் தலைவருமான டத்தோ ஆர்.ரமணன் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, இந்தியச் சமூகத்தின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து ஆலய பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களுடான பிரதமரின் சிறப்பு தேநீர் சந்திப்பு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் ஸ்ரீ பெர்டானாவில் நடைபெற்றது.
அச்சந்திப்பில் கலந்து கொண்ட டத்தோ ஆர்.ரமணன், அரசியல் வேற்றுமைகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்திய சமூகத்தின் மேன்மைக்காக ஒருங்கிணைந்த தளத்தில் பயணிக்கும் சூழ்நிலையைக் காண முடிந்ததாகக் கருத்துரைத்தார்.
இதன்வழி, இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கியிருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் உரியத் தீர்வு பிறக்கும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருக்கும் நிலையில், இனி பிரதமர் கொண்டு வரும் அனைத்துச் சமுகநலத் திட்டங்களும் அதன் இலக்கை அடைவதற்கு அனைவரும் தங்களின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்க முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
‘மலேசியா மடானி’ எனும் கொள்கையின் அடிப்படையில் நாட்டு மக்களுக்கு சுமையில்லா வாழ்வாதாரத்தைக் கொடுக்க முயற்சித்து வரும் பிரதமர், உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துதிலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக்குவதிலும் முயற்சித்து வருகிறார்.
இக்கடுமையான சவாலை எதிர்கொள்ளும் சக்தியையும் வலிமையையும் பிரதமருக்குக் கொடுக்கும் வகையில், நாட்டு மக்கள் அனைவரும் அவருக்கு வற்றாத ஆதரவு வழங்கி துணைநிற்க வேண்டும் என டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks